உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 8,20,916 ஆக அதிகரித்துள்ளது
- 2,83,407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- 22,123 பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8,20,916 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,83,407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,15,386 பேர் குணமடைந்துள்ளனர். 22,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 27,114 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 519 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதம் 62.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதம் 62.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 7,862 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 2,38,461 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 95,647 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக புனே மாவட்டத்தில் இம்மாதம் 13-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல தானே மாவட்டத்தில் அமலில் உள்ள லாக்டவுன் இம்மாதம் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்னர் 7 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு தற்போது 8 லட்சத்தினை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இந்த பகுதி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,089 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.09 லட்சமாக அதிகரித்துள்ளது. டெல்லியை பொறுத்த அளவில் குணமடைந்தோர் விகிதம் 77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
மணிப்பூர், நாகாலாந்து, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு, மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சிக்கிம் ஆகியவை பூஜ்ஜிய இறப்பு விகிதத்தினை கொண்டுள்ளன.
சர்வதேச அளவில் 2,28,102 பேர் நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் அதிகபட்ச பாதிப்பினை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.