4,000க்கும் அதிகமான தொற்று நோயாளிகளில் 2,156 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Bengaluru: கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில தினங்களாக வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 4,120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 63,772 ஆக அதிகரித்துள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 91 கொரோனா தொற்று நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒட்டு மொத்த உயிரிழப்பு 1,331 ஆக அதிகரித்துள்ளது.
4,000க்கும் அதிகமான தொற்று நோயாளிகளில் 2,156 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது கடந்த 24 மணி நேரத்தில் 1,290 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை ஒட்டு மொத்தமாக 23,065 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10.77 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதே போல 543 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது நாடு முழுவதும் 26,816 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் விகிதமானது 62.86 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.