This Article is From Apr 06, 2020

கொரோனா நோயாளியின் இறுதிச்சடங்கில் விதி மீறல்! அலட்சியம் செய்ததாக அரசு மருத்துவமனை மீது புகார்!!

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், 'கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. கொரோனா என்பது தேசிய பேரிடர். மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்' என்றார்.

கொரோனா நோயாளியின் இறுதிச்சடங்கில் விதி மீறல்! அலட்சியம் செய்ததாக அரசு மருத்துவமனை மீது புகார்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது

Chennai:

ராமநாதபுரம் மாவட்டம் கீழைக்கரையில் நடந்த கொரோனா பாதிக்கப்பட்டவரில் இறுதிச் சடங்கில் 50 பேர் கலந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த தகவலை சிகிச்சை அளித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

கீழக்கரையை சேர்ந்த 71 வயதுடைய நபர் துபாயில் இருந்து சென்னைக்கு வந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிர் கடந்த 2-ம்தேதி பிரிந்தது. மரணத்திற்கு பின்னர்தான் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே அவரது சடலம் சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. 

அவரது இறுதிச் சடங்கில் விதிகளை மீறி சுமார் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவை சேர்ந்த மணிகண்டனும் ஒருவர். மத சடங்குகளுக்காக பாதுகாப்பு உறையிலிருந்து  சடலம் வெளியே எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில் கீழக்கரை மக்கள் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஸ்டான்லி மருத்துவமனை உடனடியாக சோதனை முடிவுகளை அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

முடிவு தெரியவரும் வரை காத்திருங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தால் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், 'கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. கொரோனா என்பது தேசிய பேரிடர். மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்' என்றார்.

கீழக்கரை நபரின் பிரேதத்தை கையாண்ட சுகாதார பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 50 அதிகரித்து, 621-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ''தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 50 அதிகரித்து, 621-ஆக உயர்ந்திருக்கிறது. புதிதாக பாதிக்கப்பட்ட 50 பேரில், 48 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-லிருந்து 6-ஆக அதிகரித்துள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

91,851 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருக்கின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார். இவர் திருச்சிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார்.

பாதிப்பை உறுதி செய்வதற்கு 1 லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 30 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

.