சிறையில் இருந்து வெளிவந்த மறுதினமே நாடாளுமன்றத்திற்கு ப.சிதம்பரம் வருகை தந்துள்ளார்.
New Delhi: நாடாளுமன்றத்தில் எனது குரலை அரசால் அடக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக 106 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நேற்றைய தினம் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, இன்று பிற்பகல் ஊடகங்களை சந்திக்க உள்ளார்.
ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இன்று நாடாளுமன்ற அவைக்கு வருகை தந்த அவர், வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்திலும் கலந்துகொண்டார்.
நேற்றைய தினம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் இருந்து வெளிவந்தார். சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஜாமீன் வழங்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறைவேற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், 106 நாட்களுக்குப் பிறகு நான் வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்', என்றார்.
முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 74 வயதான சிதம்பரத்திற்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தலைமறைவாகவில்லை, சாட்சியங்களை கலைக்கவில்லை, விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பவற்றின் அடிப்படையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பொருளாதார குற்றச் செயல்கள் ஆபத்தானவை என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஜாமீன் வழங்குவது என்பது விதிமுறை என்றும், மறுப்பது விதி விலக்கு என்றும் கூறியுள்ளது.
சிதம்பரமோ அல்லது அவர் சார்பாகவோ யாரும் சாட்சியை மிரட்டியதாக எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மூடி முத்திரையிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்கத் தகுந்தது அல்ல. அவற்றை பார்ப்பதற்கு நீதிபதக்கு அதிகாரம் உண்டு. இருப்பினும், அவற்றை நீதிபதி ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.