சிறையிலிருந்து வெளிவந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் இருந்து வெளிவந்துள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ப.சிதம்பரத்தை அவரது மகனும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் வரவேற்றார். கார்த்தி சிதம்பரம் தெரிவித்தபடி, சிதம்பரம் நாளை நாடாளுமன்றத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் விடுவிக்கப்பட்டது தொடர்பான 10 தகவல்கள் :
1. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிதம்பரத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்ல முடியாது. அறிக்கை வெளியிடுதல், நேர்காணல், சாட்சிகளை தொடர்புகொள்ளுதல் என எதையும் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
2. தனக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். அவர் தலைமறைவாகவில்லை, சாட்சியங்களை கலைக்கவில்லை, விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பவற்றின் அடிப்படையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
3. பொருளாதார குற்றச் செயல்கள் ஆபத்தானவை என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஜாமீன் வழங்குவது என்பது விதிமுறை என்றும், மறுப்பது விதி விலக்கு என்றும் கூறியுள்ளது.
4. சிதம்பரமோ அல்லது அவர் சார்பாகவோ யாரும் சாட்சியை மிரட்டியதாக எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
5. மூடி முத்திரையிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்கத் தகுந்தது அல்ல. அவற்றை பார்ப்பதற்கு நீதிபதக்கு அதிகாரம் உண்டு. இருப்பினும், அவற்றை நீதிபதி ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
6. சிதம்பரம் விடுதலையானது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 106 நாட்கள் சிதம்பரம் சிறையில் இருந்தது என்பது பழிவாங்கும் அரசியல் என பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை வரவேற்பதாக கூறியுள்ள ராகுல் தான் குற்றமற்றவர் என்பதை சிதம்பரம் நிரூபிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபோது அவரை சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்தனர்.
7. 106 நாட்கள் சிதம்பரம் சிறையில் இருந்ததை கார்த்தி சிதம்பரம் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.'106 நாட்களை கடந்த பின்னர் இவ்வளவுதானா?!' என்று குறிப்பிட்டுள்ளார் கார்த்தி. ஜாமீன் குழுவில் சிதம்பரம் சேர்ந்தவிட்டதாக பாஜகவின் சம்பித் பத்ரா கிண்டல் செய்துள்ளார்.
8. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, வாதிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறையில் இருந்தபோதும், சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையில் சிதம்பரம் ஈடுபட்டு வந்தார் என்று குற்றம் சாட்டினர்.
9. மூத்த அரசியல்வாதியான சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 2007-ல் நடந்த ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது.
10. சிபிஐ கைதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 16-ம்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரத்தை பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டின்பேரில் கைது செய்தனர். ஷெல் நிறுவனங்கள் குழுவை அமைத்தார், வெளிநாட்டு வங்கிகளை பண மோசடிக்கு பயன்படுத்தினார் என்பது உள்ளிட்ட புகார்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.