நான் முதல்வராக இருந்து எத்தனை முறை மக்களை சந்திக்கிறேன். அவர் மக்களை சந்திக்கிறாரா"
மதிமுக-வுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ந்து வாதப் போர் நடந்து வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை, “பூமிக்கு பாரமாக உள்ளார்” என்று விமர்சனம் செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக ப.சிதம்பரம், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், “அதிமுக, பாஜக என்ன செய்தாலும் ஒப்புக் கொள்ளும். நாளைக்கே தமிழகத்தில் நடக்கும் தங்களது ஆட்சியைக் கலைத்தால் கூட அதிமுக அதை வரவேற்கும்” என்று கேலியாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்தான் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு நீர் திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஒரு நிருபர் ப.சிதம்பரத்தின் கருத்து பற்றி கூற, “ப.சிதம்பரம் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்க என்ன பயன். இந்த பூமிக்குதான் பாரம். அவர் என்ன திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். எவ்வளவு ஆண்டு காலம் நிதி அமைச்சராக இருந்தார்…
தேவையான நிதி கொடுத்தாரா, புதிய தொழிற்சாலைகள் அமைத்தாரா, புதிய திட்டங்கள் கொண்டு வந்தாரா, காவிரி நதி நீர் பிரச்னையைத் தீர்த்தாரா, முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்த்தாரா, பாலாறு பிரச்னையைத் தீர்த்தாரா. அவருக்கு அவரது சுயநலம்தான் முக்கியம். நாட்டுப் பிரச்னையைப் பற்றி அவருக்கு என்னாளும் அக்கரை இருந்தது கிடையாது.
எனவே அவரது பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் அவரை ஏற்கெனவே நிராகரித்துவிட்டனர். அவருக்கு அதிகாரம் தேவை. அதற்காக எதையாவது பேசிக் கொண்டிருப்பார். நான் முதல்வராக இருந்து எத்தனை முறை மக்களை சந்திக்கிறேன். அவர் மக்களை சந்திக்கிறாரா. எந்த மக்களை அவர் சந்திக்கிறார். மத்திய அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் கூட எத்தனைத் திட்டங்களை புதியதாக அறிவித்தார். எத்தனை முறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்” என்று தொடர் கேள்விகளை எழுப்பினார்.