This Article is From Sep 03, 2019

“மாஜி அமைச்சர், எம்.பி., வழக்கறிஞர்”- பிணைக்கு ப.சிதம்பரம் (Chidambaram) போட்ட பட்டியல்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 20 ஆம் தேதி, சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது.

“மாஜி அமைச்சர், எம்.பி., வழக்கறிஞர்”- பிணைக்கு ப.சிதம்பரம் (Chidambaram) போட்ட பட்டியல்!

இரண்டு வாரங்களாக சிபிஐ காவலில் இருக்கிறார் சிதம்பரம்

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்குப் பிணை கொடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். பிணைக்கான மனுவில் சிதம்பரம், “நாடாளுமன்ற உறுப்பினராக சமூகத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. எனவே, நான் தலைமறைவாக இருக்க எந்த வாய்ப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். அவரது பிணை மனு மீதான விசாரணை இன்று நடைபெறும். 

“74 வயதாகும் சிதம்பரம், சமூகத்தில் நல்ல மதிப்புடன் இருந்து வருபவர். அவர் நீதியிடமிருந்து தப்பிக்கவோ, தலைமறைவாக போகவோ வாய்ப்பே இல்லை. உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். 1990 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிதம்பரம், மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆவார்” என்று பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 20 ஆம் தேதி, சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து அவர் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் இரண்டு வாரங்களாக சிபிஐ காவலில் இருக்கிறார். 

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுவில், “இந்த வழக்கைப் பொறுத்தவரை தயார் செய்யப்பட்டு அனைத்து ஆவணங்களும் நிதித் துறையிடம்தான் உள்ளது. அது சிதம்பரத்துக்குக் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆகவே, வழக்கு விசாரணையைக் குலைக்கும் வகையில் அவரால் நடந்து கொள்ள முடியாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது அல்லது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 12 நாட்களாக சிபிஐ காவலில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் சிதம்பரம். எனவே, இதற்கு மேலும் சிபிஐ கஸ்ட்டி நீட்டிக்கப்படக் கூடாது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபல், நீதிமன்றத்தில் வாதாடியபோது, “சிதம்பரத்துக்கு சில பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட வேண்டும். அவருக்கு 74 வயதாகிறது. அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும். திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது” என்றார். இதை ஏற்ற நீதிமன்றம், அவரை திகார் சிறைக்கு அனுப்பாமல் சிபிஐ காவலை மட்டும் நீட்டித்து உத்தரவிட்டது. 
 

(PTI தகவல்களுடன்)

.