நாளை காலை 11 மணிக்கு ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் இருப்பார் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை
- வெளிநாடு செல்லுதல், பத்திரிகைகளுக்கு பேட்டி உள்ளிட்டவற்றுக்கு தடை
- 106 நாட்கள் சிறையில் இருந்தார் ப.சிதம்பரம்
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கைக்காக அவரை பாஜக அரசு சிறை வைத்தது என்றும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் வைத்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தான் குற்றமற்றவர் என்பதை சிதம்பரம் நிரூபிப்பார்.
இவ்வாறு ராகுல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இதன் முடிவில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அவர் திகார் சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு பின்னர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெளிநாடு செல்வது, பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு அவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு தொடர்பாக பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் சிதம்பரத்தின் மீது பாய்ந்துள்ளது.
இதற்கிடையே தனது தந்தையின் ஜாமீன் தொடர்பாக பேட்டியளித்த சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், நாளை காலை 11-மணிக்கு மாநிலங்களவையில் சிதம்பரம் இருப்பார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டார். அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர்.