வருத்தம்தான்; ஆனால் ஆச்சர்யம் இல்லை என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
New Delhi: சுயமரியாதை கொண்ட கல்வியாளர்கள் எவரும் மத்திய பாஜக அரசியலில் பணியாற்ற முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல், தனது பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், ''உர்ஜித் படேலின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது. ஆனால் அதுபற்றி ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. சுய மரியாதை கொண்ட எந்தவொரு கல்வியாளரும் மத்திய பாஜக அரசில் பணியாற்ற முடியாது.
நவம்பர் 19-ம் தேதியே பல சிக்கல்கள் ஏற்பட்டன. அன்றைக்கே உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்க வேண்டும். தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று உர்ஜித் படேல் எண்ணியிருந்தார். அப்படி எதுவும் நடக்காது என்று எனக்கு தெரியும்.
இன்னொரு மீட்டிங் வைத்து அவரை இழிவுபடுத்துவதற்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்திருக்கிறார். இது நல்லதுதான்.'' இவ்வாறு சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.