டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த புதன் கிழமை பரபரப்பான சூழலில் கைது செய்யப்பட்டார்
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்கக் கோரி ப.சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அவருக்கு எதிராக மத்திய அரசு, வலுவான வாதங்களை முன் வைத்து, ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு தரப்பு, ‘ஐ.என்.எக்ஸ் வழக்கில் மிக பிரமாண்ட பணமோசடி நடைபெற்றுள்ளதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் சார்பில் ஆஜரானார் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. அவர் நீதிமன்றத்தில், “இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஷெல் நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அதற்கு ப.சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும். இதில் மிக பிரமாண்டமான பணமோசடி நடந்துள்ளது” என்று வாதாடினார்.
ஆனால், அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் வரும் திங்கட்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிதத்து நீதிமன்றம். அதே நேரத்தில் கடந்த வியாழக் கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அமைப்புக்கு அனுமதி அளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எந்த வழிகாட்டுதலையும் தெரிவிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா நீதிமன்ற அமர்வுக்கு முன்னர் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் குற்றம் புரிந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல், உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதற்கு, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த புதன் கிழமை பரபரப்பான சூழலில் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், ‘இந்த வழக்கின் கிங்-பின் ஆக இருக்கிறார் சிதம்பரம். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காரணத்தினாலேயே சிறப்பு மரியாதை அளிக்கப்படக் கூடாது' என்று ஜாமீனை மறுத்து தீர்ப்பளித்தார்.
(PTI தகவல்களுடன் எழுதப்பட்டது)