This Article is From Dec 05, 2019

'106 நாட்கள் விசாரணையில் ஒரு குற்றச்சாட்டுகூட எனக்கெதிராக பதிவு செய்யப்படவில்லை': சிதம்பரம்

உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக தன்னால் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதியில் இருந்து சிதம்பரம் சிறையில் உள்ளார்.

New Delhi:

ஜாமீனில் வெளி வந்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்தில் தனக்கு எதிராக ஒரு புகார் கூட தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். திகார் சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் கூறியதாவது-

என்னால் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. நான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிகிறேன். இந்த வழக்கு குறித்த கருத்து தெரிவிக்க மாட்டேன். 

உண்மை என்னவென்றால், 106 நாட்கள் நான் சிறையில், விசாரணையில் இருந்தேன். இருப்பினும் எனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூட விசாரணை அதிகாரிகளால் சுமத்த முடியவில்லை. எனக்கு நேர்ந்த அனைத்தையும்பற்றி வியாழன் அன்று தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 74 வயதான சிதம்பரத்திற்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தலைமறைவாகவில்லை, சாட்சியங்களை கலைக்கவில்லை, விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்பவற்றின் அடிப்படையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பொருளாதார குற்றச் செயல்கள் ஆபத்தானவை என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஜாமீன் வழங்குவது என்பது விதிமுறை என்றும், மறுப்பது விதி விலக்கு என்றும் கூறியுள்ளது.

சிதம்பரமோ அல்லது அவர் சார்பாகவோ யாரும் சாட்சியை மிரட்டியதாக எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மூடி முத்திரையிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்கத் தகுந்தது அல்ல. அவற்றை பார்ப்பதற்கு நீதிபதக்கு அதிகாரம் உண்டு. இருப்பினும், அவற்றை நீதிபதி ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் விடுதலையானது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  106 நாட்கள் சிதம்பரம் சிறையில் இருந்தது என்பது பழிவாங்கும் அரசியல் என பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை வரவேற்பதாக கூறியுள்ள ராகுல் தான் குற்றமற்றவர் என்பதை சிதம்பரம் நிரூபிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தபோது அவரை சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்தனர்.

106 நாட்கள் சிதம்பரம் சிறையில் இருந்ததை கார்த்தி சிதம்பரம் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.'106 நாட்களை கடந்த பின்னர் இவ்வளவுதானா?!' என்று குறிப்பிட்டுள்ளார் கார்த்தி. ஜாமீன் குழுவில் சிதம்பரம் சேர்ந்தவிட்டதாக பாஜகவின் சம்பித் பத்ரா கிண்டல் செய்துள்ளார்.  உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, வாதிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறையில் இருந்தபோதும், சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையில் சிதம்பரம் ஈடுபட்டு வந்தார் என்று குற்றம் சாட்டினர். 

 மூத்த அரசியல்வாதியான சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 2007-ல் நடந்த ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. 

.