அரசின் அத்துமீறல்களை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என சிதம்பரம் கூறியுள்ளார்.
New Delhi: மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரங்களை முடக்கும் வகையில், எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் நடக்கும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், இதற்கு ஏற்றார் போல் தேர்தலில் நல்ல பதிலடி கொடுப்பார்கள் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்.
இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று, வருமான வரித்துறைக்கு தெரியும். ஏற்கனவே பல அமைப்புகள் எங்கள் வீடுகளில் சோதனை நடத்தியதில் எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் மத்திய அரசின் வருவாய் துறைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சோதனைகள் நடுநிலையாகவும், பாரபட்சமின்றியும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.