This Article is From Apr 03, 2020

‘டியர் நரேந்திர மோடி…’- பிரதமரின் ‘விளக்கு ஏற்றும்’ அறிவிப்பை சூகமாக கலாய்த்த ப.சிதம்பரம்

'மார்ச் 22-ம் தேதி கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்திய விதம் மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது'

‘டியர் நரேந்திர மோடி…’- பிரதமரின் ‘விளக்கு ஏற்றும்’ அறிவிப்பை சூகமாக கலாய்த்த ப.சிதம்பரம்

"ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்"

ஹைலைட்ஸ்

  • இன்று காலை 9 மணிக்குப் பிரதமர் மோடி உரையாற்றினார்
  • கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் உரையாற்றினார்
  • தன் உரையின் போது மக்களுக்கு சிறப்பு வேண்டுகோள் விடுத்தார் மோடி

“ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த திடீர் அறிவிப்பை கடுமையாக சாடியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். 

கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த நிலையில், இன்று  நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். 

அதில், பிரதமர் மோடி கூறியதாவது, ‘மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. 

மார்ச் 22-ம் தேதி கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்திய விதம் மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது.

மேலும், ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம். 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம். 

இவை அனைத்திலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வீடுகள் மற்றும் பால்கனியில் இருந்தே இதனை செய்ய வேண்டும். இந்த முயற்சியின் போது எந்த நேரத்திலும் நாம் தெருக்களுக்கு வெளியே வரக்கூடாது. சமூக விலகலை கடைப்பிடிப்பது என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு ப.சிதம்பரம், “மக்களுக்குப் பிரதமரின் அறிவிப்பால் இரண்டு வகைகளில் ஏமாற்றம். அடையாளத்துக்காக ஒரு விஷயத்தை செய்வது முக்கியம்தான். ஆனால், அடுத்த என்ன செய்யப் போகிறோம் என்கிற ஐடியா மற்றும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதும் முக்கியம்.

பணி செய்யும் ஆண் மற்றும் பெண், வியாபாரி முதல் தினக்கூலி வரை அனைவரும், பொருளாதாரச் சரிவை சரி செய்ய திட்டங்கள் அறிவிப்பீர்கள் என்றும், பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்றும் எதிர்பார்த்தார்கள்.

டியர் பிரதமர் நரேந்திர மோடி, நாங்கள் உங்களையும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்கப் போகிற நிகழ்வையும் மதிக்கிறோம். அதற்கு மாறாக, நீங்களும் எங்களைப் போல மருத்துவர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்,” என்று சூசகமாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

.