P Chidambaram in Thiruvalluvar Row - "நாணாமை நாடாமை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்”
P Chidambaram in Thiruvalluvar Row - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை (Thiruvalluvar statue) அவமதிக்கப்பட்டுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக (BJP) தலைவர்கள், அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் மற்றும் தமிழக பாஜக-வின் ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படங்களைப் பகிர்ந்திருந்தனர். இதுவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் (P Chidambaram) கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம், தன் குடும்பத்தினர் வாயிலாக, “தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.
"நாணாமை நாடாமை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்” - குறள் 833.
பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018 இல் வழக்குப்பதிவு செய்தது.
சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு பிணை கிடைத்தபோதும், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.