This Article is From Aug 26, 2019

“சிதம்பரத்துக்கு ட்விட்டர் கணக்கு இருக்கிறதா என்று சிபிஐ கேட்டது…”-நீதிமன்றத்தில் காரசார வாதம்!

உச்ச நீதிமன்றத்தில் தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கு கோப்புகளை, ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளது என்று சிதம்பரம் தரப்பு குற்றஞ்சாட்டியது.

“சிதம்பரத்துக்கு ட்விட்டர் கணக்கு இருக்கிறதா என்று சிபிஐ கேட்டது…”-நீதிமன்றத்தில் காரசார வாதம்!

அமலாக்கத் துறை, “நாங்கள் எந்த ஆவணங்களையும் வெளியே கசியவிடவில்லை. இந்த விவகாரத்தைச் சிதம்பரம்தான் அரசியலாக்கி வருகிறார்” என்று பதிலடி கொடுத்தது. 

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்புக்கும் அமலாக்கத் துறை தரப்புக்கும் காரசார விவாதம் நடந்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கு கோப்புகளை, ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளது என்று சிதம்பரம் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதற்கு அமலாக்கத் துறை, “நாங்கள் எந்த ஆவணங்களையும் வெளியே கசியவிடவில்லை. இந்த விவகாரத்தைச் சிதம்பரம்தான் அரசியலாக்கி வருகிறார்” என்று பதிலடி கொடுத்தது. 

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

“அமலாக்கத் துறையோ சிபிஐ-யோ, நீதிமன்றத்தில் கூறும் எந்தக் குற்றச்சாட்டு குறித்தும் சிதம்பரத்திடம் இதுவரை தெரிவிக்கவில்லை. சிதம்பரத்திடம் சிபிஐ, உங்களுக்கு ட்விட்டர் கணக்கு இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள்” என்று கொதிப்புடன் எதிர்வினையாற்றினார் சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபில். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் குற்றம் புரிந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத் துறை கூறியதுடன், அவரை கஸ்டடியில் வைத்து விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. 

அமலாக்கத் துறை மேலும், இந்த வழக்கில் செய்த பணமோசடியை வைத்து 17 பினாமி அல்லது போலி வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் மிகவும் விலை உயர்ந்த 10 சொத்துகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாங்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறது. 

அமலாக்கத் துறை சம்மனை அடுத்து கடந்த டிசம்பர் 19, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 21 ஆம் தேதிகளில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார் சிதம்பரம். அப்போது, சரியான ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றும் அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது. 

 முடிவாக, “சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சரோ, முன்னாள் உள்துறை அமைச்சரோ அல்லது சாதாரண குடிமகனோ… அவருக்கு முன் ஜாமீன் கொடுப்பது நீதியை குழி தோண்டி புதைப்பது போல ஆகும்” என்று வாதாடியது. 

.