This Article is From Sep 18, 2019

''தமிழ் மீது எந்த மொழியும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம்'' - ப.சிதம்பரம்

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கூறியுள்ள திமுக அதனை கண்டித்து 20-ம்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Written by

திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழி மீது எந்த மொழியும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தி மொழி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்துவதற்கு நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், அதனால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இது இந்தி மொழியை அது அல்லாத மாநிலங்களில் திணிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அதனை கண்டித்து நாளை மறுதினம் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதில் காங்கிரசும் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-

தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது.  இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.

Advertisement

இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 
 

Advertisement