கடந்த 15 நாட்களாக சிபிஐ கஸ்டடியில் இருந்த சிதம்பரத்திடம் சுமார் 400 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
New Delhi: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பு, அவரின் சிறைவாசத்தைத் தவிர்க்க பல்வேறு முயற்சிகள் எடுத்தபோதும், அவரை 15 நாட்கள் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது டெல்லி சிறப்பு நீதிமன்றம். அவர் இந்த 15 நாட்களும் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்த சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்படுவார்.
திகார் சிறை எண் ஒன்று, 9 ஆம் வார்டில் அவர் அனுப்பப்படுவார் என்று தகவல் தெரிந்த வட்டாரம் நம்மிடம் கூறியுள்ளது. அவருக்கு ஸி-பிரிவு பாதுகாப்பு இருப்பதால், சிறையில் அவருக்கு சில சிறப்பு சலுகைகள் அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் சிதம்பரத்துக்கு, தனி சிறை அறை, படுக்கை, மேற்கத்திய முறையிலான கழிவறை மற்றும் மருந்து கொடுப்பதற்கான வழிவகைகள் செய்து தரப்படும்.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சிபிஐ அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து போலீஸ் வேன் மூலம் அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்.
கடந்த 15 நாட்களாக சிபிஐ கஸ்டடியில் இருந்த சிதம்பரத்திடம் சுமார் 400 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாம். வழக்கில் சம்பந்தமுடைய 5 விட்னஸ்களை வைத்தும் சிதம்பரத்திடம் குறுக்கு விசாரணை செய்யப்படதாம்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிபிஐ தவிர்த்து ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் அமலாக்கத் துறையம் தனியாக ஓர் வழக்கைப் பதிவு செய்துள்ளது.