This Article is From Dec 27, 2019

திமுகவுக்கு பாராட்டு; எடப்பாடி அரசுக்கு கொட்டு..! - CAA போராட்டத்தில் பா.இரஞ்சித்!!

CAA Protest - "தமிழகத்தில் சமீபத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைத்தப் பேரணி மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது"

திமுகவுக்கு பாராட்டு; எடப்பாடி அரசுக்கு கொட்டு..! - CAA போராட்டத்தில் பா.இரஞ்சித்!!

"இன்னமும் தமிழக அளவில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு வந்ததாக தெரியவில்லை."

CAA Protest - குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னையில் தொடர் இசை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உரையாற்றினார்கள். 

பா.இரஞ்சித் உரையாற்றுகையில், “இந்திய அளவில் குடியுரிமைச் சட்டத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைத்தப் பேரணி மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இன்னமும் தமிழக அளவில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு வந்ததாக தெரியவில்லை. 

அதற்கு முக்கிய காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் அதிமுக எடப்பாடி அரசு. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்கள் மற்றும் சட்டங்களை எந்தவித எதிர்ப்புமின்றி தமிழக அரசு ஏற்கிறது. இந்திய அளவில் 11 மாநிலங்கள், குடியுரிமைச் சட்டத்தை ஏற்க முடியாது என்று தீர்க்கமாக முழங்கிய போதும், இங்கு சூழல் அப்படியில்லை. இன்னும் சொல்லப் போனால், குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான பிரசாரத்தை அதிமுக மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். இந்திய அளவில் சந்திரசேகர் அசாத் மற்றும் கண்ணையா குமார் ஆகியோர் செய்யும் பிரசாரங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் இன்னும் அதிக அளவில் இளைஞர்களைத் திரட்ட வேண்டும். அதற்கான வேலைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். ஜெய் பீம்,” என்று உறுதியாக பேசினார். 

முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “இந்த பாசிச பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் பற்றியும் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் இன்றை எழுத்தாளர்கள், கலைஞர்கள், இளைஞர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் சட்டத்தைப் பின் வாங்கும் வரையில் போராட்டத்தையும் யாரும் பின் வாங்கப் போவதில்லை.

அமித்ஷா கும்பலே… மோடி கும்பலே… நீங்கள் கொண்டு வந்துள்ள சட்டத்தை ஒன்று திரும்பிப் பெறுங்கள், அல்லது, திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்,” என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். 

.