This Article is From Jul 26, 2019

“பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம்!”- போலீஸ் முன்னர் உறுதியெடுத்த ‘ரூட்டு தலைகள்’

“எந்த விரும்பத்தகாத செயலையும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் பெற்றோருக்கும் நல்ல பெயரை வாங்கி தருவோம் என்று உறுதியளிக்கிறோம்"

Advertisement
தமிழ்நாடு Written by

பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 ‘ரூட்டு தல’ மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர்

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே, கடந்த 23 ஆம் தேதி, அரசு பேருந்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இந்த மோதல் குறித்தான வீடியோ ஒன்று வெளியாகி தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ரூட்டு தல' யார் என்பதில் இருந்த பிரச்னைதான் தற்போது அரிவாள் வெட்டு வரை வந்துள்ளது. 

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் ‘ரூட்டு தலைகள்' என்று கண்டறியப்பட்ட மாணவர்கள், போலீஸார் முன்னிலையில், தவறான செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று கூறி உறுதிமொழி எடுத்துள்ளனர். 

சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரியில் அக்கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் ஆயவு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 90 ‘ரூட்டு தலைகள்' கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் திங்களன்று ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. 

Advertisement

இப்படிப்பட்ட சூழலில் நேற்றிரவு அம்பத்தூர் காவல் நிலைய துணை ஆணையர் ஈஷ்வர், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 ‘ரூட்டு தல' மாணவர்களை வரவழைத்தார். அவர்களிடம் இனி, தவறு செய்ய மாட்டோம் என்று கூறும்படியான பிரமாணப் பத்திரத்தை எழுதி வாங்கிக் கொண்டார். மேலும், இனி ஒழுங்காக நடந்து கொள்வோம் என்று சொல்லும்படியான உறுதிமொழியையும் ஏற்க வைத்தார். 

‘ரூட் தலைகள்', “எந்த விரும்பத்தகாத செயலையும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் பெற்றோருக்கும் நல்ல பெயரை வாங்கி தருவோம் என்று உறுதியளிக்கிறோம். தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

Advertisement
Advertisement