குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் தலைமீது கைது வைத்து பாட்டி திம்மக்கா ஆசிர்வாதம் வழங்கினார்.
New Delhi: கர்நாடகாவில் 8 ஆயிரம் மரங்களை வளர்த்த 106 வயது பாட்டி திம்மக்காவுக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். விருதை பெற்றுக் கொண்ட பாட்டி குடியரசு தலைவரை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார். இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் ஹுலிகல் கிராமத்தை சேர்ந்தவர் திம்மக்கா. 106 வயதான இவர் மரங்களை வளர்ப்பதை முக்கிய பணியாக செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 1991-ல் காலமானார்.
சுமார் 65 ஆண்டுகளாக மரங்களை வளர்க்கும் பணியை செய்து வந்த திம்மக்கா இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் மரங்களை வளர்த்திருக்கிறார். அவரது இந்த மகத்தான சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திம்மக்காவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட திம்மக்கா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆசிர்வாதம் செய்தார். இந்தக் காட்சி காண்போரை நெகிழ வைத்தது.
திம்மக்காவை விட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 33 வயது இளையவர். அவரை பாட்டி ஆசிர்வாதம் செய்த காட்சியை கண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தனது குழந்தையை வளர்க்க முடியாததால் 40 வயதில் திம்மக்கா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதுதான் மரங்களை வளர்ப்பது என்பது அவருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. இதையடுத்து தொடர்ந்து அவர் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
மரச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சில சமயங்களில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திம்மக்கா தண்ணீர் எடுத்து வருவாராம். கடந்த 65 ஆண்டுகளில் பாட்டி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.