படங்கள் வரையும் 80 வயது பாட்டி ஜோதையா பாய்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பழங்குடியின பாட்டி ஜோதையா பாயின் ஓவியங்கள் இத்தாலியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் அவரது ஓவியங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதையா பாய். 80 வயதாகும் அவர், ஓவியங்கள் வரைவதை முழுநேர தொழிலாகக் கொண்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் காலமானார்.
அது முதற்கொண்டு தனது அன்றாட தேவைகளுக்கும், குடும்ப செலவுகளுக்கும் பாட்டி ஜோதையா படங்களை வரைந்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஓவியங்கள் இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாட்டி ஜோதையா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-
நான் அனைத்து விதமான விலங்குகளின் படங்களை வரைவேன். நான் என்ன பார்க்கிறேனோ அவை அனைத்தையும் வரைந்து விடுவேன். ஓவியம் வரையும் பழக்கத்தை எனது கணவர் காலமான 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். எனது அன்றாட தேவைகளுக்கும், குடும்ப செலவுகளுக்கும் ஓவியம் வரைகிறேன். எனது ஓவியங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரது ஆசிரியர் ஆசிஷ் சுவாமி கூறுகையில், 'வலி, வேதனைகளை மறந்து விட்டு ஓவியம் வரைவதில் ஜோதையா முழு கவனம் செலுத்துவார். அவரது ஓவியம் இத்தாலியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல சாதனைகளை அவர் செய்வார்' என்று கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)