மசூத் அசார் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விற்பனை செய்யவும், கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Islamabad: சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியும், பயணம் மேற்கொள்ள தடை விதித்தும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா. அமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னர் இந்தியா முன்வைத்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ உரிமையால் நிராகரித்தது.
இந்நிலையில், உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
இதையடுத்து சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத் தடைக்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. மேலும், ஐநா தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள், வெடிமருந்து வாங்கவோ, விற்கவோ அசாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. மசூத் அசார் மீதான தடைகளை அமல்படுத்தவும், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.