காஷ்மீர் மற்றும் கில்ஜீத் பல்திஸ்தான் விவகாரங்களுக்கான அமைச்சர் அலி அமின்.
Islamabad: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பல நாடுகள் ஆதரித்தாலும், தங்களிடம் ஏவுகணை இருப்பதாகவும் அதன் மூலம் இந்தியாவை தாக்குவோம் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் அலி அமின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக நேற்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சர்ச்சைக்குரிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருப்பதாவது-
காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்தால், பாகிஸ்தானுக்கு போர் செய்வதை விட வேறு வழியில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் எல்லா நாடுகளும் பாகிஸ்தானின் எதிரி நாடுகளாக கருதப்படும். இந்தியா மீதும் அதனை ஆதரிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக கூறும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தை ஐ.நா.வில் பேசியது.
கடந்த செப்டம்பர் மாதத்தின்போது ஐநாவில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ,'இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உண்டு. இந்தியாவை விட பாகிஸ்தான் மிக மிக சிறிய நாடு. இரு அணு ஆயுத நாடுகள் சண்டையிட்டுக் கொண்டால் அதனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து எச்சரிக்கிறேன். இதனை அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். ஏதேனும் தவறு நடந்தால் மோசமான விளைவுகளுக்கு இந்தியா தன்னை தயார் செய்து கொள்ளட்டும்' என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஐ.நா. உள்பட பல சர்வதேச அரங்குகளில் இந்தியா தெளிவுபடுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரபு நாடுகள் உள்பட சார்க் நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கின்றன.