இந்தியாவின் பாதுகாப்புக்கு தியாகம் செய்த வீரர்களை மறக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
New Delhi: நேருக்கு நேர் நின்று சண்டையிடும் அளவுக்கு பாகிஸ்தானிடம் பலம் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதனால்தான் அந்நாடு மறைமுகப்போரில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 20-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது-
இந்திய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. நமது அண்டை நாடான பாகிஸ்தானால் நமக்கு எதிராக நேரடியாக மோத முடியாது. சிறியதொரு போரை நமக்கு எதிராக செய்வதற்கு அவர்களுக்கு சக்தி இல்லை. இதனால்தான் மறைமுகப் போரில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கார்கில் போர் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார். மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடு கார்கில் போர் குறித்தும், இந்திய வீரர்களின் தியாகம் குறித்தும் பாராட்டி பேசினார்.