ரஷ்யாவிடம் இருந்து எஸ் -400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது.
Islamabad: ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்க இந்தியா முடிவு செய்திருப்பது பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்-400 ரக ஏவுகணை தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைத்துவிடும். புதிய ஆயுத போட்டிகளை ஏற்படுத்தும். எங்களுக்கு எதிராக எந்தவொரு சக்தி மிக்க ஏவுகணையை பயன்படுத்தினாலும் அதனை தாக்கி அழிக்கும் சக்தி பாகிஸ்தானுக்கு உண்டு. தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் மதிப்பில் எஸ் – 400 ரக ஏவுகணை வாங்குவதற்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தியது. ரஷ்ய அதிபர் புதின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
எஸ்-400 ஏவுகணையை பொறுத்தவரையில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் சக்தி இந்த ஏவுகணைகளுக்கு உண்டு. ரஷ்யாவின் நவீன ரக ஆயுதமாக இந்த ஏவுகணை கருதப்படுகிறது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி எஸ் – 400-க்கு உள்ளது.