காஷ்மீர் குறித்து இந்திய நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து இம்ரான் கான், “அதீத பிரச்னைகள் நேரிடும்” என்று எச்சரித்திருந்தார்.
ஹைலைட்ஸ்
- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து பாக். எதிர்வினை
- ஐ.நா சபையை நாட உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது
- காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் நேற்று பேசியிருந்தார்
New Delhi: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான், இந்தியாவுடனான நட்புறவு மற்றும் வர்த்தகத்தைத் துண்டிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் பாகிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரையும் அந்நாடு வெளியேற்ற உள்ளதாக தகவல்.
இன்று பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கமிட்டியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அந்நாட்டின் உள்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். அந்த சந்திப்பைத் தொடர்ந்துதான் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
“1.இந்தியாவுடனான நட்புறவை பேணுவதில் சுணக்கம். 2.இந்தியாவுடனான வர்த்தகம் துண்டிப்பு. 3.இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை. 4.ஐ.நா சபைக்கு இந்த விவகாரம் எடுத்து செல்லப்படும். 5.வீரமிக்க காஷ்மீரிகளை வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நினைவுகூறப்படுவார்கள்” என்று பாகிஸ்தான் அரசு தரப்பு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் குறித்து இந்திய நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து இம்ரான் கான், “அதீத பிரச்னைகள் நேரிடும்” என்று எச்சரித்திருந்தார். அதையொட்டியே, இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது பாகிஸ்தான்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கியதை அடுத்து இம்ரான் கான், “இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எதாவது நடவடிக்கையில் ஈடுபட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். இறுதி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாங்கள் போராடுவோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல், காஷ்மீர் குறித்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய தரப்போ, “உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக் கூடாது. இந்தியா, மற்ற நாட்டின் உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. அதே போலத்தான் மற்ற நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும்.” என்று பதிலடி கொடுத்தது.