This Article is From Mar 05, 2019

இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சரின் பதவி பறிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் கடந்த பிப்ரவரி 24-ம்தேதி நிலவியபோது சர்ச்சைக்குரிய கருத்தை பஞ்சாப் மாகாண அமைச்சர் பயாசுல் ஹசன் தெரிவித்திருந்தார்.

இந்துக்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • பாகிஸ்தான் அமைச்சர் பயாசுல் ஹசனின் பதவி பறிப்பு
  • இந்துக்களை அவமதிக்கும் விதமாக கருத்து கூறியிருந்தார் பயாசுல்
  • பதவி பறிப்பை இம்ரான் கானின் கட்சி செய்துள்ளது
New Delhi:

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாகாண அமைச்சர் பயாசுல் ஹசன் சோகானின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. இதையடுத்து பாகிஸ்தான் மீது சர்வதேச அழுத்தங்கள் தரப்பட்டன. 

இந்த விவகாரம் பற்ற எரிந்து கொண்டிருந்தபோது கடந்த பிப்ரவரி 24-ம்தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அமைச்சர் பயாசுல் ஹசன், இந்துக்களுக்கு எதிராக கருத்தை கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் நெருக்கடிகளுக்கு பின்னர் இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில் அவரது பதவியை பறித்து அவரது கட்சியான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது-

பஞ்சாப் மாகாண தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியில் இருந்து பயாஸ் சோகன் நீக்கப்பட்டுள்ளார். இந்து சமூகத்தை அவமதிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததற்காக சோகன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத நம்பிக்கையை அவமானம் செய்வதை எங்கள் கட்சி பொறுத்துக் கொள்ளாது. சகிப்புத்தன்மைக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். 

இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. 
 

.