This Article is From Aug 01, 2019

குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அனுமதி!!

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் அளித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

குல்பூஷனை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

New Delhi:

பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கும்  குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் அவரை சந்திப்பதற்கு இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. 

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது. 

ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனையை எதிர்த்து இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை நீதிமன்றம், விசாரித்தது.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களை விசாரித்த தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார். குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடைவிதித்து, குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், 'பாகிஸ்தான் அளித்திருக்கும் அனுமதி குறித்து ஆய்வு செய்வோம். தூதரக ரீதியில் இந்த விவகாரத்தை அணுகுவோம்' என்று தெரிவித்துள்ளார். 

.