12.41 முதல் அனைத்து இந்திய விமானங்களும் பாக். வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கடந்த பிப்.26ல் பாக். தனது வான்வெளியை முடக்கியது.
- பாக்.இன்று மீண்டும் அனைத்து விமானங்களும் பறக்க அனுமதி
- பிப்.11 முதல் வான்வெளி வழிதடங்களை மட்டுமே பாக். பயன்படுத்தியது.
New Delhi: பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் முடக்கப்பட்ட பாகிஸ்தான் வான்வெளி எல்லையை, இந்திய விமானங்கள் மீண்டும் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்தது.
இதனிடையே, கிரிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் அப்போது, பிரதமர் விமானம் செல்ல அனுமதி அளித்தது. எனினும், பல்வேறு காரணத்தால் மாற்று வழியைத் தேர்வு செய்தது இந்தியா.
தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்த பின்னர், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மே மாதம் நீக்கியது.
ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை பயணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை. இதனால், பயணிகள் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு நிஷ்டம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும், பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது.
கடந்த ஜூலை 3ம் தேதி மாநிலங்களவையில் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாகிஸ்தான் வான்வெளி முடக்கப்பட்டதால், ஜூலை 2ஆம் தேதி வரை மட்டும் ரூ.491 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனியார் விமான நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, கோ ஏர், போன்ற நிறுவனங்களுக்கும் ரூ.30.73 கோடி, ரூ.25.1 கோடி மற்றும் ரூ. 2.1 கோடி, இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. இந்த வான்வழி நள்ளிரவு 12.41 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது.