ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
New Delhi: ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு இந்தியாவுக்கு தொல்லை கொடுத்தது. மேலும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டிவிட்டு மறைமுக போரிலும் பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றது. குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை கொண்டு வந்த, பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடுகளும் ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அமைச்சரவை கூட்டத்தின்போது இந்தியா குறித்து விவாதித்தோம். ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் வான் வழி, நில வழிகளுக்கு தடை விதிப்பது பற்றி பேசினோம். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.' என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் நில மற்றும் வான் வெளிகளுக்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.