சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம் என இம்ரான்கான் ட்வீட்டரில் கூறியுள்ளார்.
New Delhi: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது.
ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை நீதிமன்றம், விசாரித்தது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களை விசாரித்த தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார். குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடைவிதித்து, குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உண்மைகளை விரிவாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும், குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.