Kartarpur corridor - இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இந்த கோயிலில் தரிசனம் செய்யச் செல்வோரிடம் விசா கேட்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
New Delhi: Kartarpur corridor தொடக்க விழாவிற்காக, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை (Manmohan Singh), பாகிஸ்தான் (Pakistan) அரசு அழைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி வெளியிட்டுள்ளார்.
அவர் இன்று இது குறித்து ஒரு வீடியோ மூலம் கூறுகையில், “கர்தார்பூர் காரிடர் திட்டம் என்பது எங்களுக்கு மிகப் பெரிய ஒன்று. அதற்கு நாங்கள் முழு வீச்சில் தயாராகி வருகிறோம். தொடக்க விழாவில் பங்கேற்க இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பு விடுப்போம்.
அவருக்கு விரைவில் நாங்கள் கடிதம் அனுப்புவோம். சீக்கிய சமூகத்தின் பிரதிநிதியாக அவர் திகழ்கிறார். குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி வரும் சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்கவும் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
1522 ஆம் ஆண்டு குரு நானக் தேவ் மூலம் கட்டப்பட்டது கர்தார்பூர் கோயில். தற்போது அந்த கோயில், பாகிஸ்தான் நாட்டுக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்குச் செல்லும் வகையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாதை இந்தியாவின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் ஆரம்பித்து, பாகிஸ்தானின் கர்தார்பூர் வழியாக கோயிலுக்குச் செல்லும். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இந்த கோயிலில் தரிசனம் செய்யச் செல்வோரிடம் விசா கேட்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.