Kashmir: பாகிஸ்தானில் இருந்து கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக இந்திய அரசு தரப்பு, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
Islamabad/New York: இந்தியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்திய தரப்பு, பாகிஸ்தானிடம், “தீவிரவாதிகளுக்கு எதிராக கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இம்ரான் கான், இப்படிப்பட்ட தடாலடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘தி நியூ யார்க் டைம்ஸ்' இதழுக்கு இம்ரான் கான் அளித்த பேட்டியில், “இந்தியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. நாங்கள் ஒவ்வொரு முறை அமைதிக்காக குரல் கொடுத்தபோதும், அதை அவர்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இதற்கு மேலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கொதிப்புடன் கூறியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா, “நாங்கள் ஒவ்வொரு முறை அமைதிக்காக முயற்சி எடுத்தபோதும், அதற்கு மோசமாக எதிர்வினை ஆற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக முறையான, தீர்க்கமான, நம்பக்கூடிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக இந்திய அரசு தரப்பு, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பதன்கோட் விமான தளத்தின் மீது பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் தீவிரவாத அமைப்பு தாக்குல் நடத்தியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்திக் கொண்டது இந்திய அரசு.
ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியா, பாகிஸ்தானிடம், ‘அது எங்களின் உள்நாட்டு விவகாரம். ஜம்மூ காஷ்மீரின் சீரான வளர்ச்சியை மனதில் வைத்தே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது' என்று தெரிவித்துவிட்டது.
நியூ யார்க் டைம்ஸ் நேர்காணலின்போது இம்ரான் கான், “பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு, காஷ்மீரில் எதாவது அசம்பாவிதத்தை செய்ய வாய்ப்புள்ளது. அதற்கு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். 2 அணு ஆயுத நாடுகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் நிலைமை வரும். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது உலகிற்கே அச்சுறுத்தலான செய்திதான்” என்று பரபர கருத்தைக் கூறினார்.
இம்ரான் கான், இதைப் போன்ற ‘போர் சூழல்' கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்தாலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “காஷ்மீரில் மிகவும் பதற்றமான சூழல் இருப்பது போன்ற பிம்பத்தைப் பாகிஸ்தான் சர்வதேச நாடுகளிடம் காட்ட விரும்புகிறது. ஆனால் சர்வதேச சமூகம், அங்கு போர் சூழல் இருப்பதாக நினைக்கவில்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளது.