எல்லையில் மிகப் பெரும் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
Srinagar: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் செக்டரில் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஞாயிறன்று அதிகாலை நடந்த இந்த ஆப்பரேஷன் குறித்த விவரங்களை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் அணியும் சீருடை போன்று அணிந்து வந்தவர்கள், ஊடுருவ முயன்றுள்ளனர். அந்த 2 பேரை சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம், '' உங்கள் ராணுவ வீரர்களின் சடலங்களை எடுத்துச் செல்லுங்கள்'' என்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு செய்தி அனுப்பியுள்ளது.
நவ்காம் செக்டாரில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினரை போன்ற தோற்றம் கொண்ட 2 பேர் ஞாயிறன்று காலை நடமாடிக்கொண்டிருந்தனர். இதைக் கண்காணித்த இந்திய ராணுவத்தினர், அவர்களை எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் முன்னேறியதைத் தொடர்ந்து அவர்களை நோக்கி இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அணியும் சீருடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 பேரை தவிர்த்து வேறு யாரேனும் எல்லைக்குள் ஊடுருவியுள்ளனரா என ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவம் பாகிஸ்தானியர்களின் ஊடுருவல் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி திட்டங்களை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. உங்களைப் போன்ற வீரர்களின் சடலங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்திடம் நாங்கள் கூறவுள்ளோம். ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்களுக்கு போதிய பாதுகாப்பை அந்நாட்டு ராணுவம் அளிக்கவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.