Islamabad: பாகிஸ்தானின் கீழ் சபைக்கு சமீபத்தில் தேர்தல் முடிந்தது. இந்நிலையில், அந்நாட்டின் அடுத்த பிரதமர் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷரிஃப் ஆகிய இருவரும் பிரதமர் பதவிக்கு தேர்வாக போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கு கடந்த புதன் கிழமை விண்ணப்பத்திருந்ததாக ஜியோ செய்தி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி, பாகிஸ்தான் தேசிய சட்டப்பரேவைக்குத் தேர்தல் நடந்தது. அதில், இம்ரான் கானின் பிடிஐ, தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அப்போது 116 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 11 ஆம் தேதி, சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான இடங்களின் முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பிடிஐ கட்சி, 158 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 330 பேர் இருக்கின்றனர். அதில் பெரும்பான்மை இருப்பவர்கள்தான் பிரதமராக முடியும்.
தற்சமயம், பிடிஐ கட்சிக்கு 175 மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் நாட்டின் சிறு மற்றும் பிராந்தியக் கட்சிகளின் ஆதரவும் அடங்கும். இந்த கட்சிகளெல்லாம் இம்ரான் கானுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.
கடந்த வாரம் பிடிஐ கட்சி சார்பில், வரும் 18 ஆம் தேதி, இஸ்லாமாபாத்தில் இருக்கும் ஜனாதிபதி இல்லத்தில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சிகள் முறையே 81 மற்றும் 54 இடங்களை கைவசம் வைத்துள்ளன.
இரு கட்சிகளும் கூட்டணி சேரும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் பிபிபி கட்சி, ‘ஷரிஃபுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கமாட்டோம்’ என்று கூறிவிட்டது. இதனால், ஷரிஃபின் பிரதமராகும் கனவு பலிக்காத எனப்படுகிறது.