"நான் திராவிடக் கொள்கைகளில் நாட்டம் கொண்டவன். அதன் சமத்துவம், சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை, சமக்கிருத எதிர்ப்பு போன்ற அனைத்திலும் உடன்படுகிறேன்."
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பழ.கருப்பையா (Pala.Karuppiah), திமுகவிலிருந்து விலகியுள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தன் விலகல் குறித்த காரணங்களை விலக்கினார்.
“ஒரு கட்சி நிறுவனமயமாக்கப்பட்டு விட்டால், அங்கு பணத்தின் பெயராலேயே அதிகாரம் செய்யப்படும். கடந்த 50 ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், பணத்தை முன்வைத்தே அதைச் சாதித்திருக்கின்றன. இரு கட்சிகளும் ஊழலை ஊக்குவித்துள்ளன. நான் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்து, கலைஞர் அழைத்ததன் பெயரால் திமுகவில் இணைந்தேன்.
என்னைக் கட்சிக்கு அழைத்த பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் முடங்கிவிட்டார். பின்னர் மு.க.ஸ்டாலினோடு நல்ல உறவுடன்தான் இருந்தேன். ஆனால், இங்கு என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதால், வெளியே வருவதைத் தவிர எனக்கு வேறு வழி கிடையாது.
திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் கோடிக் கணக்கில் செலவு செய்யும் வேட்பாளராக இருந்தால் மட்டுமே களத்தில் நிறுத்தப்படுகிறார்கள். கோடிக் கணக்கில் செலவு செய்து அதிகாரத்தில் அமரும் ஒருவர் எப்படி ஊழல் செய்யாதவராக இருப்பார்.
உதாரணத்திற்கு செந்தில் பாலாஜியை எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்து பல கோடி ரூபாயை சுருட்டியவர் அவர். தொடர்ந்து, தினகரனுடன் இணைந்து அவருக்கு வலது கையாக இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்து தற்போது ஸ்டாலினுக்கு வலது கையாக இருக்கிறார். செந்தில் பாலாஜி போன்ற நபர்கள் கையில் கோடிக் கணக்கில் பணம் இருப்பதனாலும் சாதி பலம் இருப்பதனாலும், அதிகாரத்தில் சுலபமாக நுழைந்து விட முடிகிறது. இது சரியான போக்கா?,” என்று ஆவேசமாக செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
தொடர்ந்து, “ஸ்டாலினிடம் இந்தக் குறைகளை சுட்டிக்காட்டினீர்களா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு கருப்பையா, “நான் இன்று செய்தியாளர்களை சந்திப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இதையெல்லாம் ஒவ்வொன்றாகக் கூறினேன். அவர் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். எது குறித்தும் வாக்குறுதி கொடுக்கவில்லை. அவரின் நிலைமை அப்படி இருக்கிறது. இனிமேல் நான் திமுகவிலிருந்து என்ன செய்யப் போகிறேன்,” என்றார்.
இறுதியாக அவர், “நான் திராவிடக் கொள்கைகளில் நாட்டம் கொண்டவன். அதன் சமத்துவம், சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை, சமக்கிருத எதிர்ப்பு போன்ற அனைத்திலும் உடன்படுகிறேன். ஆனால், அதை முன்னிருத்தும் திமுக சரியான பாதையில் பயணிக்கவில்லை. நான் யாரோடும் அரசியல் களத்தில் இணையப் போவதில்லை. இப்போதைக்கு என்னிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை,” என்றார் தீர்க்கமாக.