This Article is From Jan 16, 2019

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: சிறந்த வீரருக்கு பைக் பரிசு!

10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement
தமிழ்நாடு Posted by (with inputs from NDTV)

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 

மதுரை, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. நாற்றுக்கணக்கான மாடுகளும், அதை அடக்க மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிக கெடுபிடியுடன் செய்யப்பட்டதால், எந்த வித அசம்பாவிதங்களும் இல்லாமல் முழு நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியும் சுமூகமாக நடந்து முடிந்தது. அதைப் போலவே இன்றும் ஜல்லிக்கட்டு எந்த விதப் பிரச்னைகளுமின்றி நடந்து முடிந்தது.

Advertisement

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில், 900 காளைகளும், 800-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மதுரையைச் சுற்றியுள்ள திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், யார் பிடியிலும் சிக்காமல் தப்பித்து ஓடும் மாடுகளுக்கும் பரிசு வழங்கப்படுகின்றது. ஆம்னி கார், பைக், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், வழங்கப்படும் பரிசுகளில் அடக்கம்.

Advertisement

அந்தவகையில், போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  9 காளைகளை பிடித்த அஜய்க்கு 2வது பரிசும், 8காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 3வது பரிசும் வழங்கப்பட்டன.

சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது. 2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.  3வது பரிசு மதுரை கே.கே.நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது.
 

Advertisement