கல்லூரி பெண்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் கூட சபரிமலை அடிவாரத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Thiruvananthapuram: தரிசனம் செய்வற்காக சபரி மலை அய்யப்பன் கோவில் இன்று சில மணி நேரங்களில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பாரம்பரியத்தை காக்கும் விதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒருகட்டமாக சபரி மலைக்கு செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
சபரி மலைக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இதில் கார்கள், பஸ், டாக்ஸி உள்ளிட்டவையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையின்போது பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களிடம் பாரம்பரிய முறையை பின்பற்றுங்கள். சபரி மலைக்கு செல்லாதீர்கள் என்று வயதில் முதிய பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வயது வித்தியாசம் இன்றி பெண்கள் அனைவரும் சபரி மலைக்க செல்லலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பெரும் போராட்டங்கள் வெடித்தன. மாதவிடாய் பிரச்னையை காரணம் காட்டி அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அவர்களில் ஒரு தரப்பினர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கப்போவதில்லை என்றும், நீதிமன்றமே அனுமதி அளித்தாலும் சபரி மலைக்கு செல்லப்போவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, சபரி மலைக்கு செல்லும் பெண்கள் எவரையும் தடுக்கக் கூடாது என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். தரிசனத்திற்காக அய்யப்பன் கோயில் திறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான போலீசார் சபரிமலைக்கு செல்லும் வழி நெடுகிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.