This Article is From Aug 26, 2020

கொரோனா காலக்கட்டத்தில் NEET, JEE தேர்வுகள் அறிவித்துள்ளது எதனால்..?- கல்வி அமைச்சர் விளக்கம்

NEET and JEE: சில பெற்றோர்கள், கல்வித் துறை சார்ந்த வல்லுநர்கள், கொரோனா காலக்கட்டத்தில் இப்படி தேர்வுகள் நடத்துவதை விமர்சித்துள்ளனர்.

JEE and NEET: தேர்வு மையங்களில், மாணவர்கள் அதிக இடைவெளிவிட்டு, குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது
  • இந்த காரணத்தினால் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது
  • இப்படியான சூழலில்தான் நுழைவுத் தேர்வுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் JEE தேர்வுகள் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு சேர்வதற்காக நடத்தப்படும் NEET நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அது பற்றி விளக்கியுள்ளார் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க்.

அரசின் தொலைக்காட்சியான டிடி நியூஸுக்கு அளித்த பேட்டியில் நிஷாங்க், “ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் ஏன் இன்னும் நடத்தப்படவில்லை என்று பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து எங்களிடம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் மிகவும் கவலையில் உள்ளார்கள். எத்தனை காலம் படித்துக் கொண்டே இருப்பது என்னும் குழப்பத்தில் அவர்கள் உள்ளார்கள்

ஜேஇஇ தேர்வுகளைப் பொறுத்தவரை 8.58 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் 7.25 லட்சம் மாணவர்கள் ஏற்கெனவே அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்துவிட்டனர். 

நாங்கள் மாணவர்களுக்காகத்தான் பணி செய்கிறோம். அவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன் பிறகுதான் அவர்களின் கல்வி” என்று கூறியுள்ளார். 

மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் நிஷாங்க், “மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் அந்த முடிவு எடுக்கப்படும்” என முடித்துக் கொண்டார்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத வரும் மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அவர்கள், முகக்கவசம் மற்றும் கையுரை அணிந்து தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமென்றால், புட்டியில் அதைக் கொண்டு வர வேண்டும் என்றும் சானிடைசரையும் எடுத்தவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களில், மாணவர்கள் அதிக இடைவெளிவிட்டு, குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு, உடல் வெப்பம் சோதிக்கப்படும். உடல் வெப்பம் அதிகம் இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையில்தான் தேர்வை எழுத முடியும். 

சில பெற்றோர்கள், கல்வித் துறை சார்ந்த வல்லுநர்கள், கொரோனா காலக்கட்டத்தில் இப்படி தேர்வுகள் நடத்துவதை விமர்சித்துள்ளனர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்கும், இந்த தேர்வு அறிவப்புக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். 

அசாம், பிகார், குஜராத், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மட்டுமல்லாமல், இப்படி இயற்கை பேரிடராலும் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி பல அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்வுகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள். 

.