பாரிஸ் நகர சிறுநீர் கழிப்பிடங்களில் புதிய முயற்சியாக, தண்ணீர் தேவைப்படாத, நாற்றமில்லாத, புதிய திறந்தவெளி பசுமை சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு Uritrottoir என்று பெயரிடப்பட்டு சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டன. சிவப்பு நிறத்தில் மேற்புறம் செடிகள் வளரும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தப் புதிய வகை திறந்தவெளிப் பொதுக் கழிப்பிடங்கள் உள்ளூர்வாசிகளின் கேலிக்கு ஆளாகிவிட்டது. சொல்லபோனால் சில பாரிஸ்வாசிகள் செம கடுப்பில் உள்ளனர்.
“இது கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் உள்ளது. நமது அந்தரங்கத்துக்கு மதிப்பில்லை. ஆனால் சாலையில் சிறுநீர் கழிப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை” என்கிறார் நியூ யார்க் நகர சுற்றுலாப் பயணியான ஜானதன். “இவ்வளவு திறந்தவெளியில் வைத்தால் பலர் இதைப் பயன்படுத்த சங்கடமாக இருக்கும். அதுவும் செய்ன் நதிக்கரையில் பல படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அழகிய காட்சிக்கு அருகிலா இப்படி ஒரு கழிப்பிடம்!” என்றே பலரும் அங்கலாய்க்கிறார்கள்.
பாரிசின் மற்ற இடங்களில் பொருத்தப்பட்ட இத்தகைய பொதுக் கழிப்பிடங்கள் எதிர்ப்பை சந்திக்காத நிலையில் அழகான இல் செய்ண்ட் லூயி தீவின் நோத்ர டாம் தேவாலயத்தின் அருகே உள்ள இக்கழிப்பிடம்தான் அங்குள்ளோரை முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.
ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் கோரிக்கைப்படியே இதை அங்கு பொருத்தியதாகக் கூறுகின்றது சிட்டி ஹால்.
அழகிய இடத்தில் அந்தரங்கத்துக்கு இடமற்ற இந்தத் திறந்தவெளி கழிப்பிடம் வேறு ஒரு எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. ஆண்களுக்கு மட்டும் கழிப்பிடம் கட்டினால் போதுமா? பெண்கள் என்ன செய்வார்கள்? எங்கே போவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இதற்கு சிட்டி ஹால் தரப்பில், “பெண்களுக்கான் கழிப்பிடத்துக்கு கேபின் தேவை. இவ்வாறு திறந்தவெளியில் அமைக்க முடியாது. ஏற்கனவே உள்ள பொதுக் கழிப்பிடங்களை அவர்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றி அமைத்துக்கொண்டு வருகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.
Click for more
trending news