இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து கொடுப்பார்
New Delhi: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக்கும் முன்னிலையில் உரையாற்றினார்.
17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர், கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து, புதியதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இன்று ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து ராஜ்யசபாவின் கூட்டத் தொடர் ஆரம்பமாகும். ஜூலை 26 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும். ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார சர்வே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதையடுத்து ஜூலை 5 ஆம் தேதி, 2019- 20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து கொடுப்பார். புதிய அரசு சென்ற மாதம் அமைந்ததைத் தொடர்ந்து பிரதமர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
குடியரசுத் தலைவர் உரையின்போது, “வெயில் அதிகமாக இருந்தாலும், அதிக சதவிகித மக்கள் தேர்தலில் வாக்களிக்க வந்தனர். பெண்களும் பெருமளவு வாக்குச்சாவடிகளுக்கு வந்தது மகிழ்ச்சி.
இந்த முறை தேர்தல் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது. வாக்கு அளித்தவர்களிலும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலும் பெண்கள் சதவிகிதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியாகும்.
பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் அணையத்துக்கு வாழ்த்துகள்.
தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது நாட்டு மக்கள் வளர்ச்சி வேண்டும் என்ற நோக்கில் வாக்களித்துள்ளது புரிகிறது. இதனால்தான் 2014 தேர்தலைவிட இந்த முறை ஒரே கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன” என்று பேசினார்.