'உயிரிழந்த தலித் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். 20 அடி சுவர், வீடு மீது விழுந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இந்த விவகாரத்தின் தாக்கம் இன்னும் தமிழக அளவில் குறையாத நிலையில், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர், செந்தில்குமார், லோக்சபாவில் இது குறித்துப் பேசியுள்ளார்.
“தமிழகத்தின் மேட்டுப்பாளையத்தில், சட்டத்துக்குப் புறம்பாக 20 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுவர் சமீபத்தில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதில் பரிதாபமாக 17 உயிர்கள் பறிபோயின. அந்த 17 பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த 20 அடி சுவரைக் கட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தையும் மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த தலித் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார் செந்தில்குமார்.
மேட்டுப்பாளையத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், “நடூர் பகுதியில் மிகவும் பலீகனமாக இருந்த கட்டுமானம் குறித்து உள்ளூர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், அரசு தரப்பிடம் இங்குள்ள மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், அதை அலட்சியமாகக் கருதியது அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு. அந்த அலட்சியத்தால் தற்போது 17 உயிர்கள் பறிபோயுள்ளன. இதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அரசும் அதிகாரிகளும் சரியாக செயல்படாத காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று ஆதங்கப்பட்டார்.