நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ல் தொடங்க வாய்ப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14 முதல் அக்.1ம் தேதி வரை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக நாடளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரானது விடுமுறை இல்லாமல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, இந்த கூட்டத்தொடரில், காலையில் ஒரு அமர்வும், பிற்பகலில் ஒரு அமர்வும் இருக்கும் ஒவ்வொரு அமர்வும் நான்கு மணி நேரம் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. மொத்தமாக 18 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
எம்.பிக்கள் தங்களது தொகுதிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற காரணத்திற்காக வார இறுதி நாட்களிலும் நாடாளுமன்றம் செயல்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மக்களவை, மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட உள்ளன.
முன்னதாக, மாநிலங்களவை நடைபெறும் போது தூர்தர்ஷன், பிடிஐ, ஏஎன்ஐ செய்தி நிறுவனங்கள் தவிர்த்து 7 செய்தியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மக்களவை நடைபெறும் போது, 15 செய்தியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமர்வு நடக்கும் போது, முன்னாள் எம்.பிக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், தற்காலிக பாஸ் வைத்திருக்கும் நிருபர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.