ஹைலைட்ஸ்
- அவைத் தலைவர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார், எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
- முதன் முறையாக மக்களவை சபாநாயகருக்கு இதைப்போன்ற கடிதம் எழுதப்பட உள்ளது
- காங்கிரஸ், திரிணாமூல், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடிதம் எழுத உள்ளன
New Delhi: ராஜ்யசபாவின் சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, அவையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டி, எதிர்கட்சிகள் அவருக்கு கடிதம் அனுப்பப் போவதாக தகவல் வந்துள்ளது. இதைப்போன்ற நடவடிக்கையை எதிர்கட்சிகள் எப்போதாவதுதான் எடுக்கும் என்பதால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மக்களவையின் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு இந்த முறை நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, 8 எதிர்கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து, பாரபட்ச நடவடிக்கை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதைப் போன்ற ஒரு நடவடிக்கையை வெங்கையா நாயுடுவுக்கு எதிராகவும் எடுக்க ஆயத்தம் ஆகி வருகின்றனர் எதிர்கட்சிகள். தற்போதைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வெங்கையா நாயுடுவுக்கு எதிராக கடிதம் எழுத ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் நிறைய எதிர்கட்சிகள் இந்தப் பட்டியலில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ‘பாரபட்சமான நடவடிக்கையில் மாநிலங்களவை சபாநாயகர் ஈடுபடுவதை சுட்டிக் காட்ட என்ன செய்யலாம் என்று விவாதித்து வருகிறோம். அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். தற்போதைக்கு, கடிதம் எழுதப் போகிறோம்’ என்று கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, ராஜ்யசபா டிவியில் ஆளுங்கட்சி தரப்பு வாதங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது என்றும், எதிர்கட்சித் தலைவர்களின் பேச்சுகள் ஒளிபரப்பப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோன்று ராஜ்யசபா இணையதளத்திலும், எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு அரசு சொல்லும் பதில்கள் நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.