விவசாயி பெஹ்லு கான் 2017 ஏப்ரலில் ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் அடித்து கொல்லப்பட்டார்.
New Delhi: ராஜஸ்தானில் கால்நடைகளைக் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு 2017ல் பசு குண்டர்கள் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லு கானுக்கு எதிராக அனுமதியின்றி பசுக்களைக் கடத்தியதாகக் கூறி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் கால்நடை சந்தையில் வாங்கிய மாடுகளை சொந்த மாநிலமான ஹரியாணாவிற்கு கொண்டு சென்றபோது பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்கள் பசுக் காவலர்களால் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு சராமாரியாக தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பின் பெஹ்லு கான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. ஒன்று தாக்கிய எட்டு நபர்களுக்கு எதிராகவும் இன்னொன்று பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி கால்நடைகளை கடத்தியதாகவும் பதியப்பட்டது.
தற்போதைய குற்றப்பத்திரிக்கை இரண்டாவது முதல் தகவல் அறிக்கையின் மேல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெஹ்லு கான் இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு முடிகிறது, இருப்பினும் அவரின் இரண்டு மகன்களின் மீதான வழக்குகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசின் பசுக்கொலை மற்றும் கடத்தல் தொடர்பான சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெஹ்லு கான் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெஹ்லு கானை தாக்கியதாக கூறப்பட்ட எட்டு பேரும் பிணையில் வெளியில் உள்ளனர். அதில் இரண்டு பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.