This Article is From Jun 09, 2018

அதி நவீன ஆயுதத் தயாரிப்பு: அமெரிக்காவை விஞ்சும் ரஷ்யா, சீனா!

இருபதாம் நூற்றாண்டில் உலகின் ஒரே வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வந்தது அமெரிக்கா. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் கதை மாறிக் கொண்டிருக்கிறது

அதி நவீன ஆயுதத் தயாரிப்பு: அமெரிக்காவை விஞ்சும் ரஷ்யா, சீனா!

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன்

ஹைலைட்ஸ்

  • ஹப்பர்சோனிக் ஆயுதங்கள் தான் ஆயுதத் தயாரிப்பில் முக்கிய இடத்தில் உள்ளது
  • சீனா, ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது
  • அமெரிக்கா, இந்த தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது

இருபதாம் நூற்றாண்டில் உலகின் ஒரே வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வந்தது அமெரிக்கா. ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் கதை மாறிக் கொண்டிருக்கிறது. பல ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுடன் வல்லரசுப் பட்டத்தை பங்கிட்டுக்கொள்ள போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஹைப்பர்சோனிக் எனப்படும் கண்ணிமைக்கும் நேரத்தில் பல மைல்கள் போகக் கூடிய ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவை ரஷ்யா, சீனா முந்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது உலகின் `பெரிய அண்ணன்' பொறுப்பில் இருக்கும் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சாதரண ஏவுகணைகள் தான் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் ராணுவ ஆயுத இருப்பில் அதிகம் வைத்திருக்கின்றன. இது குறிப்பிட்ட வழியில், சுமாரான வேகத்தில் செல்லக் கூடியவை. இந்த ஏவுகணைகள் ரேடாரில் தென்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகமாக செல்லக் கூடியவை. இதனால் இதை எதிரிகள் கண்டுபிடித்து அழிப்பது என்பது கடினம். ஆயுதங்கள் தயாரிப்பில் தற்போது வல்லரசு நாடுகளின் கவனம் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பதில் தான் இருக்கிறது. இதில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவைவிட பல படிகள் முன்னே உள்ளதாக பென்டகனில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது அமெரிக்காவுக்கும் அதன் ராணுவத்துக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம். 

இது குறித்து அமெரிக்க ராணுவத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரிசர்ச் & என்ஜினியரிங் குழுவின் தலைவர் மைக்கெல் க்ரிஃப்பின், `ஹைப்பர்சோனிக் விஷயத்தில் சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி எங்கோயோ பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, அமெரிக்க ராணுவமும், அதற்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வரும் ஒப்பந்ததாரர்களும் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டு வேகமாக நடந்தால் நல்லது. நம் முன்னேற்றத்தைப் பார்த்து அவர்கள் அஞ்ச வேண்டும்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். 

இதுபோததென்று அமெரிக்க விமானப் படை, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் தயாரிப்பதற்கு லோக்ஹெட் மார்ட்டின் என்ற நிறுவனத்துக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதையடுத்து பேசியுள்ள விமானப் படை ஜெனரல் ஜான் ஹைடன், `ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு விருப்பப்பட்ட இலக்கை அடையாமல் இதுவரை இரண்டு முறையாவது நாங்கள் தோல்வி கண்டிருக்கிறோம். பின்னர், இந்த தொழில்நுட்பத்தை கிடப்பில் போட்டுவிட்டோம். என்னைப் பொறுத்தவரை முந்தைய தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று மற்றவர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் விளாடிமிர் புதின், ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு முன்னர் அவர், ஒரு வீடியோவைப் திரையிட்டு, தங்களிடம் ஒரு சில நிமிடங்களில் உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போய் தாக்கக் கூடிய அணு ஆயுதம் பொருந்திய ஏவுகணை இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். புதினின் இந்த செயலும் பென்டகன் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹைடன், `நாங்கள், மற்ற நாடுகளின் செயல்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புதின் சொன்னது எதுவும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை' என்றுள்ளார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.