This Article is From Apr 05, 2019

முடிவுக்கு வராத மிஷன் சக்தி-யின் ‘விண்வெளி குப்பை’ விவகாரம்; அமெரிக்கா பல்டி!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பூமியைச் சுற்றி மிதந்து வரும் விண் துண்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது

முடிவுக்கு வராத மிஷன் சக்தி-யின் ‘விண்வெளி குப்பை’ விவகாரம்; அமெரிக்கா பல்டி!

இதுவரை 10 சென்டி மீட்டருக்கும் அகலமான 23,000 துண்டுகள் விண்ணில் மிதந்து வருகின்றன.

WASHINGTON:

செயற்கைக்கோளை குறி பார்த்துத் தாக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியா சில நாட்களுக்கு முன்னர் செய்தது. ‘மிஷன் சக்தி' என்று சொல்லப்படும் இந்த சோதனையின் மூலம் இந்தியாவின் இறையாண்மை விண்ணிலும் பாதுகாக்கப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், இந்த சோதனையின் மூலம் விண்ணில் 400 குப்பைத் துண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல விஷயம் அல்ல என்றும் நாசா அமைப்பு கூறியிருந்தது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அங்கு இருக்கும் விண்வெளி வீரர்களுக்கும் இந்த குப்பைத் துண்டுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தது நாசா. ஆனால், தற்போது இதற்கு மாறாக அமெரிக்க அரசு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது. 

இது குறித்து நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரடென்ஸ்டைன், ‘செயற்கைக்கோளை அழிப்பதற்காக இந்தியா நடத்திய சோதனை மிகவும் மோசமானது. இதனால், தற்போது பூமியின் மேற்பரப்பில் 400 குப்பைத் துண்டுகள் மிதக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் விண்ணில் மனிதர்களை அனுப்புவது ஆபத்தானதாக மாறும். இதைப் போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது' என்று காட்டமாக பேசினார். 

நாசாவின் கருத்துக்கு எதிர்மறையான கருத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாட்ரிக் ஷனான் கூறியுள்ளார். அவர், ‘இந்தியாவால் விண்ணில் மிதக்கும் குப்பைத் துண்டுகள் சீக்கிரமே எரிந்துவிடும்' எனத் தெரிவித்துள்ளார். இந்தியத் தரப்பும் குப்பைத் துண்டுகள் 45 நாட்களுக்குள் எரிந்துவிடும் என்றுதான் தெரிவித்துள்ளது. 

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பூமியைச் சுற்றி மிதந்து வரும் விண் துண்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. இதுவரை 10 சென்டி மீட்டருக்கும் அகலமான 23,000 துண்டுகள் விண்ணில் மிதந்து வருகின்றன.

இதில் 10,000 குப்பைத் துண்டுகளும் அடங்கும். இதில் 3,000 துண்டுகள் ஒரே நிகழ்வில் வந்தது. சீனா, கடந்த 2007 ஆம் ஆண்டு 530 மைல் தொலைவில் இருந்த ஒரு செயற்கைக்கோளை அழித்து சோதனை செய்தது. அப்போதுதான் 3,000 குப்பைத் துண்டுகள் உருவாகின.

.