This Article is From Apr 14, 2020

நாட்டு மக்கள் பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவரையை மட்டுமல்ல: மு.க.ஸ்டாலின் சாடல்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி பெறுவோருக்கு பிரதமர் மோடி செய்யப்போகும் உதவிகள் என்ன?

நாட்டு மக்கள் பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவரையை மட்டுமல்ல: மு.க.ஸ்டாலின் சாடல்

நாட்டு மக்கள் பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவரையை மட்டுமல்ல: மு.க.ஸ்டாலின் சாடல்

நாட்டு மக்கள் பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவரையை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள், பொருள் உதவிகள், பண உதவியையும் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில், ஏழை எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள், ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டாம் என்பது உட்பட நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை விடுத்திருந்தார். 

இந்நிலையில், பிரதமர் மோடியின் உரை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பிரதமர் மோடி வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நாட்டு மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல; மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள் - பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளிலும் இல்லை; இன்றைய உரையிலும் இல்லை!

மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள் என்பதன் முழுமையான பொருள், சமூகமே முடக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான். முடக்கப்பட்ட அல்லது முடங்கி இருக்கும் இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப் போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப் போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே.

மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கனவே அறிவித்திருக்க வேண்டுமே! வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பலவீனமும், சமூக ஏற்றத் தாழ்வும், சாதியப் புறக்கணிப்பும் உள்ள இந்தியச் சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியப் பிரதமர் செய்யப் போகும் உதவிகள் என்ன?

தமிழக அரசு கேட்ட நிதியைத் தரவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து; மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் மருந்துகள், அவர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயைக் கண்டறியும் கருவிகள் - இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள் என்பதே, இப்போது மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்; உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பும் பதில்கள் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

.