பாஜகவும், சிவசேனாவும் முதல்வர் பதவிக்கு சண்டையிட்டுக்கொண்டிருப்பது குழந்தைத்தனமாக உள்ளது
Mumbai: தேசியவாத காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர்கட்சியாக இருக்கவே கேட்டுக்கொண்டுள்ளனர் அதனால், கட்சியும் அதையே செய்யும் என அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
பாஜக அல்லாது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சரத்பவார் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். மேலும், பாஜகவும், சிவசேனாவும் முதல்வர் பதவிக்கு சண்டையிட்டுக்கொண்டிருப்பது குழந்தைத்தனமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சரத்பவாரிடம், சிவசேனா தங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை. மக்கள் எங்களை எதிர்கட்சிகள் வரிசையில் அமரும் படியே கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால், எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் நாங்கள் கவனமுடன் செயல்படுவோம் என்றார்.
பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது நடப்பதை பார்த்தால் குழந்தைதனமாக உள்ளது என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன.
இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதாவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனா முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தில் சிவசேனா உறுதியாக உள்ளது. மேலும், “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். முன்னதாக சிவசேனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தது.
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப் பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்த திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.