பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் முதல் சென்னை வரை 8 வழிச்சாலையை அமைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக நிலங்கள் கையப்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு நிலத்தை வழங்க பொதுமக்கள் பலர் மறுத்து வருவதால் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலத்தில் ஸ்மார்ட் சிட்டிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பழனிசாமி பேசியதாவது-
ஒவ்வொரு ஆண்டும் 17 லட்சம் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. இன்னும் 5 ஆண்டுகளில் வாகனங்களின் பெருக்கம் இரு மடங்காகி விடும். ஆகவே இதனால் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதற்கு 8 வழிச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எனவே நாட்டின் நலன்கருதி இந்த திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.